அன்னையர் தினம் என்பது அமெரிக்கர்களின் கண்டுபிடிப்பாகும். அமெரிக்காவைச் சேர்ந்த அன்னா மேரி ஜார்விஸ் என்பவர்தான் அன்னையர் தினத்தை உருவாக்கினவர்.
அவரின் தாய் ஆன் மரியா ரீவிஸ் ஜார்விஸ் அமெரிக்காவில் தாங்கள் வாழ்ந்த பகுதியில் “மதர்ஸ் டே வொர்க்’ என்ற கிளப்பை நிறுவி அதன் மூலம் அந்தப் பகுதியிலுள்ள கிராமங்களின் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த பாடுபட்டு வந்தார்.
அமெரிக்கன் சிவில் போரில் காயமடைந்தவர்களுக்கும் மருந்தளித்தும் சிகிச்சையளித்தும் வந்தார்.அவர் 1905-ம் ஆண்டு இறந்துவிட்டார். தாயின் அன்பை நினைவுகூறும் வண்ணம் மே மாதம் இரண்டாவது நாளை அன்னையர் தினமாக அறிவித்து, அதனை தேசிய விடுமுறை தினமாக்க வேண்டும் என்று நினைத்தார் அவரின் மகளான அன்னா மேரி ஜார்விஸ்.
1907-ம் ஆண்டு முதல் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இறுதியில் 1914-ஆம் ஆண்டு அதில் வெற்றி பெற்றார். முதன்முதலில் 1908-ம் ஆண்டு அன்னையர் தினத்தைக் கொண்டாடினார் அன்னா மேரி ஜார்விஸ்.
இப்போது அமெரிக்கா,இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
முதல் அன்னையர் தினத்தன்று அன்னா மேரி ஜார்விஸ் வண்ணமயமான 500 வெள்ளை நிற கார்னேஷன் பூக்களை மற்றவர்களுக்கு கொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார். தன் தாயாருக்கு கார்னேஷன் பூ மிகவும் பிடிக்கும் என்பதால் இதனை மற்றவர்களுக்கு வழங்கினார். அதன் பின்பு அதனையே பலரும் கடைப்பிடிக்கத் தொடங்கினர். பின்னாளில் வெள்ளை நிற கார்னேஷன் பூக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாலும், வேறு பூக்களையும் பிரபலப்படுத்த வியாபாரிகள் நினைத்ததாலும் அவர்கள் வேறு யுத்தியைக் கையாண்டனர். அதாவது பூ கொடுக்க விரும்புபவரின் தாயார் உயிரோடு இருந்தால் சிவப்பு வண்ண கார்னேஷன் பூக்கள், இறந்துவிட்டால் வெள்ளை நிற கார்னேஷன் பூக்களைக் கொடுக்காலம் என்று பழக்கப்படுத்திவிட்டனர்.
அதன் பின்பு அன்னையர் தினத்திற்கென்று வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருள்கள், பூங்கொத்துகள் என்று வியாபாரம் களைகட்டத் தொடங்கியது அமெரிக்காவில். அன்னையர் தினத்தின் முக்கியத்துவத்தை உணராமல் அதனை வியாபாரமாக்கியது அன்னா மேரி ஜார்விஸ்-க்கு கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. அதிலும் யாரோ ஒருவரின் கற்பனையில் உதித்த வார்த்தைகளை வாழ்த்து அட்டைகளில் பதித்து, அதில் கையெழுத்தை மட்டும் போட்டுக்கொடுப்பதை அவர் கடுமையாக எதிர்த்தார். அன்னையர் தினம் வியாபாரமாக்கப்பட்டதை எதிர்த்து அவர் போராடினார். இதனால் நாட்டின் அமைதியை சீர்குலைக்கிறார் என்று கூறி அவரை 1948-ம் ஆண்டு கைது செய்தனர். அந்த ஆண்டின் இறுதியில் அவர் இறந்துவிட்டார்.
அன்னையர் தினம்,நண்பர்கள் தினம் போன்றவை எல்லாமே அமெரிக்கர்களின் கண்டுபிடிப்புதான். இதெல்லாம் நமக்குத் தேவையே இல்லை என்பது சிலரின் வாதம். அன்னையர் தினம் என்றால் பல ஆயிரம் ரூபாய்களை செலவு செய்து பரிசுப் பொருள்கள் வாங்கி தாயாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதல்ல.
“ஸ்கூல் போகணும், கிட்டார் கிளாஸ் போகணும், லீவுல பிரண்ட்ஸ் கூட விளையாடணும், கம்ப்யூட்டர் கேம்ஸ்…அதனால…நான் எப்பவுமே ரொம்ப பிஸி’ என்று கூறும் நமக்கு வருடம் முழுவதும் குழந்தைகளுக்காகவும், குடும்பத்தினரின் நன்மைக்காகவும் உழைத்துக் கொண்டே இருக்கும் அம்மாவின் அன்பை நினைத்துப் பார்க்க நேரமில்லை. அன்னையர் தினத்தன்றாவது அவற்றை நினைத்துப் பார்த்து உங்கள் அம்மாவுடன் முழு நாளையும் சந்தோஷமாக செலவழிக்கலாம்.
அன்று நண்பர்களுடனான விளையாட்டுகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அம்மாவிற்கு தேவையான உதவிகளை வீட்டில் செய்து கொடுக்கலாம். அன்று முழுவதும் அவரின் அன்பு மழையில் நனைந்து கொண்டேயிருக்கலாம். அன்னையர் தின வாழ்த்துகள்!
|
No comments:
Post a Comment