400 நிறுவனங்கள் திருப்பி செலுத்தாத வாராக் கடன் ரூ.70 ஆயிரம் கோடி
24 பொதுத் துறை நிறுவனங்களில் வாராக் கடன் தொகை கடந்த 5 ஆண்டுகளில் ரூ.39 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.2.36 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
வங்கிகளுக்கு வாராக் கடனை திரும்பச் செலுத்தாத 406 தனியார் நிறுவனங்களின் பட்டியல் சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலை அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம், தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் இ.அருணாசலம் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:
வங்கித் துறைக்கு தற்போது சோதனைக்காலம் என்றே கூறலாம். நமது நாட்டில் வாராக் கடன் வைத்திருப்போரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால் இது தொடர்பாக அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முன்வராதது வேதனைக்குரியது.
வருமான வரி செலுத்தாதவர்கள் பட்டியலை அரசு வெளியிடுவதைப் போலவே வாராக்கடன் பட்டியலையும் உடனுக்குடன் வெளியிட வேண்டும்.
இது குறித்து மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், வாராக் கடன் வைத்திருப்போர் பட்டியலை அரசு வெளியிட்டால் இந்தியாவின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் அவ்வாறு வெளியிடாவிட்டால் மக்களின் வங்கி சேமிப்பு, வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் என்பதை அவர் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியா முழுவதும் மக்களின் பணம் சுமார் 75 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் வைப்புத்தொகையாக உள்ளது. பெரிய நிறுவனங்கள் மற்றும் பிரபலமான தொழிலதிபர்களுக்கு கொடுக்கப்பட்ட கடன்கள் நீண்ட காலமாகியும் செலுத்தப்படவில்லை. வங்கிகளில் வைப்புத் தொகை உள்ளிட்ட முதலீடுகளைச் செய்துள்ள மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய பொறுப்பு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் போன்ற அமைப்புகளுக்கு உள்ளது.
எனவேதான் இதனைக் கண்டித்து கடந்த ஆண்டு (2013) டிசம்பர் 5-ஆம் தேதி வாராக்கடன் செலுத்தாத 50 பேரின் பெயர் பட்டியலை நாங்கள் வெளியிட்டோம். ஆனால் அதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலின்போது வாராக் கடனை வைத்திருப்போர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். ஆனால் அங்கும் எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
தற்போது இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு சுமார் ரூ.70,300 கோடி வாராக் கடனை செலுத்த வேண்டிய 406 நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களின் பெயர் பட்டியலை வெளியிடுகிறோம்.
இந்த பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினரும், கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலதிபருமான விஜய்மல்லையாவின் பெயர் உள்ளது. அவர் சுமார் 7 ஆயிரம் கோடிக்கு மேல் வாராக்கடனை வைத்துக்கொண்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு ஆடம்பரமாக செல்வது உள்ளிட்ட கேளிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு மத்திய அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலுக்கும் அரசிடமிருந்து வழக்கம்போல் எந்தப் பதிலும் வராவிட்டால் அடுத்தடுத்த மாதங்களில் முறையே 3,250, 7,000 பெயர்கள் கொண்ட பட்டியல்களை வெளியிடுவோம்.
ஒருபுறம் வாராக்கடன் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நேரத்தில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல வாராக்கடன் பெற்றவர்களுக்கு புனரமைப்பு என்ற பெயரில் திரும்பச் செலுத்தக் கூடிய கடனுக்குச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும் பலரின் கடன்கள் ரத்து செய்யப்படுகின்றன. கடைசி 10 மாதங்களில் ரூ.2,40,000 ஆயிரம் கோடி வாராக்கடனை அரசு ரத்து செய்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைகள் பெரும் பொருளாதார சீர்குலைவுக்கு வழிவகுத்து விடும். இதைத் தடுக்க வங்கிகளிடம் பெற்ற வாராக் கடனைத் திரும்பச் செலுத்தாதவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும்.
வாராக் கடனை திரும்ப வசூலிக்க அரசும் ரிசர்வ் வங்கியும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். "மக்கள் பணம் மக்களின் மேம்பாட்டுக்கே' என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வரை எங்கள் சங்கங்கள் சார்பில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வோம். எங்களின் நடவடிக்கைகளை எதிர்த்து புது தில்லியில் உள்ள "டெக்னோ மேக்' என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அதனைக் கண்டித்து புது தில்லியில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம் என்றனர்.
No comments:
Post a Comment