Thursday, May 8, 2014

2ஜி வழக்கு: கனிமொழி வாக்குமூலம் பதிவு

கனிமொழி
கனிமொழி
   இரண்டாம் தலைமுறை     அலைக்கற்றை ஒதுக்கீட்டில்   முறைகேடுகள் நடந்ததாகக்   கூறப்படும் 2 ஜி வழக்கில்   குற்றம் சாட்டப்பட்டுள்ள     கனிமொழியின்    வாக்குமூலத்தை இன்று  வியாழக்கிழமை டில்லி  சிறப்பு சிபிஐ நீதிமன்றம்  பதிவு செய்தது.
  இந்த வழக்கில் குற்றம்    சாட்டப்பட்டுள்ள முன்னாள்    மத்திய அமைச்சர் ஆ.ராசா    உள்ளிட்ட மூன்று பேரிடம் இதுவரை வாக்குமூலம் பெறப்பட்டுள்ள    நிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின்    தலைவர் மு.கருணாநிதியின் மகளுமான கனிமொழியிடம் இன்று    வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
  கனிமொழியின் வாக்குமூலத்தில், இரண்டாம்    தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததாகக்  கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையின்  ஒரு பகுதியாக, ஸ்வான் டெலிகாம் நிறுவனம்  கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி வரை நிதி  வழங்கியுள்ளது என்று சிபிஐ எழுப்பிய சர்ச்சையில்  அவருடைய தொடர்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
 இந்த பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக குறிப்பிடப்படும்  காலக்கட்டத்தில் தான் அந்த நிறுவனத்தில் எந்த ஒரு முக்கிய  பொறுப்பையும் வகிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.  அதனால் இது தொடர்பில் எந்த ஒரு முடிவையும் எடுக்கும்  அதிகாரம் தனக்கு இல்லை என்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
 மேலும் கலைஞர் தொலைக்கட்சியில் அந்நிறுவனத்தின்  இயக்குனராக கடந்த 2007ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் ஒரு சில  வாரங்கள் மட்டுமே நீடித்ததாக சுட்டிக்காட்டியுள்ள கனிமொழி,  பின்னர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்டதால்  கலைஞர் டிவியின் வேறு எந்த பொறுப்பிலும் நீடிக்கவில்லை  என்றும் தெரிவித்திருக்கிறார்.
 இந்த பணப் பரிவர்த்தனை விவகாரம் தொடர்பில், கலைஞர்தொலைக்காட்சி நிர்வாகம் முன்பு வெளியிட்ட அறிக்கையில், டி.  பி. குரூப் நிறுவனமான சினியூக் பிலிம்ஸிடமிருந்து பங்குகள் பரிவர்த்தனைக்காக 214 கோடி ரூபாய் முன்பணமாகப் பெறப்பட்டதாகவும், ஆனால் பங்கு விலையை நிர்ணயிப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டால் அந்தத் தொகை, வட்டியுடன் திருப்பித் தரப்பட்டுவிட்டதாகவும், அந்த பண பரிவர்த்தனை குறித்து வருமான வரித்துறைக்கும் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
ஆ ராசாவின் வாக்குமூலம்
ஆ ராசா
ஆ ராசா
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடம், கடந்த மே 5ஆம் தேதி அன்று வாக்குமூலம் பெறப்பட்டபோது, சிபிஐ தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்திருந்தார். அத்தோடு அவர்களது குற்றப் பத்திரிக்கையில் கூறியுள்ளது போல் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் கூறிய அவர், 2ஜி தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் புதியதாக வகுக்கப்பட்ட அரசின் கொள்கையின் அடிப்படையிலேயே தான் முடிவுகள் எடுத்ததாக வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
சிபிஐ தரப்பில் இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ள 17 பேரின் வாக்குமூலப்பதிவுகள் மே 5ஆம் தேதி துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முன்னதாக அவர்கள் அனைவருக்கும் வழங்கப்படிருந்த 824 பக்கங்களை கொண்ட 1,718 கேள்விகளுக்கு, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு துவங்கிய நாளான மே 5ம் தேதி அன்று எழுத்துப்பூர்வமான பதில்களை சமர்ப்பித்தனர்.
அதன் அடிப்படையில் ஒவ்வொருவரிடமும் நீதிபதி நேரடியாக கேள்விகளை எழுப்பிப் பதிலைப் பெற்ற பின்னர், அவர்களது எழுத்துப்பூர்வமான பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.
கடந்த திங்களன்று தொடங்கிய இந்த வாக்குமூலப் பதிவை, இந்திய முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவிடம் இருந்து சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஒ.பி.சாய்னி துவங்கினார். நேரடியான உரையாடல் மூலம் பதிவு செய்யப்படவுள்ள இந்த வாக்குமூலத்தில், கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதி அப்போது குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment